மின்வாரிய ஊழியர் தற்கொலை
போரூரில், மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
சென்னை போரூர், தெருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 42). மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி லதா. கடந்த சில மாதங்களாக ஜெகதீஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு லதா, அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த ஜெகதீஷ், தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வீட்டுக்கு திரும்பி வந்த லதா, தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த சித்தாலபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(29). இவரது சொந்த ஊர் தர்மபுரி ஆகும். இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஒட்டியம்பாக்கத்தில் தங்கி, அங்குள்ள தனியார் இரும்பு பொருட்கள் கடையில் தங்கி வேலை பார்த்து வந்தார். தினமும் கடையை திறப்பது, பூட்டுவது இவரது பணி.
நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் கடை திறக்கப்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் பரமசிவம், சவுந்தரராஜன் தங்கி இருந்த வீட்டுக்குசென்று பார்த்தார். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது சவுந்தரராஜன் வீட்டின் உள்ளே தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சவுந்தரராஜன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.