கடலூரில் மீனவர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம், 6 ஆண்டுகளுக்கு பிறகு கொழுந்தனுடன், மனைவி சிக்கினார்
கடலூரில் மீனவர் மாயமான வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கொழுந்தனுடன், மனைவி போலீசில் சிக்கினார். கள்ளக்காதலை கண்டித்ததால் மீனவரை கொன்று உடலை வீட்டில் குழிதோண்டி புதைத்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கடலூர் முதுநகர்,
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கூழையாறு கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் என்கிற முருகதாசன்(வயது 45). மீனவர். இவருக்கும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுமிதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு இருவரும் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முருகதாஸ் வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். சுமிதா தனது மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது முருகதாசின் தம்பி சுமேர், அவ்வப்போது சிங்காரத்தோப்பில் உள்ள அண்ணன் வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது அவருக்கும், சுமிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2013-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் இருந்து முருகதாஸ், அவரது மைத்துனரின் திருமணத்துக்காக சிங்காரத்தோப்புக்கு வந்தார். சில நாட்களுக்கு பின்னர் அவர் திடீரென மாயமானார். அவர் எங்கே சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை? இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் முருகதாஸ் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் சுமிதாவும், சுமேரும் திடீரென மாயமானார்கள்.
கணவன், மனைவியுடன், முருகதாசின் தம்பியும் அடுத்தடுத்து மாயமானது உறவினர்கள், நண்பர்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. முருகதாஸ் வெளிநாடு சென்று விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் முருகதாசின் தாயார் பவுனம்மாள்(67), கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அந்த மனுவில், எனது மகன் வெளிநாடு சென்று விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அவனது பாஸ்போர்ட் வீட்டில் உள்ளது. எனவே அவன் வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பு இல்லை. எனது 2-வது மகன் சுமேருடன், சுமிதாவும் மாயமாகி இருப்பதால் அவர்களின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே காணாமல் போன எனது மகன் முருகதாசை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து முருகதாஸ், அவரது தம்பி சுமேர், மனைவி சுமிதா ஆகியோரை கண்டு பிடிக்க கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சுமேரும், சுமிதாவும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், திருவனந்தபுரத்துக்கு சென்று இருவரையும் பிடித்து கடலூருக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தனர். அவர்களிடம் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி விசாரணை நடத்தினார்.
போலீஸ் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. முருகதாஸ், வேலைக்காக சவுதி அரேபியா சென்றதால், சுமேருக்கும், சுமிதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டிலேயே உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனிடையே கடந்த 2013-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் இருந்து சிங்காரத்தோப்பிற்கு வந்த முருகதாசிற்கு, மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. இதனால் அவர், சுமிதாவையும், சுமேரையும் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுமேர், தனது அண்ணன் என்றும் பாராமல் முருகதாசை கொலை செய்து, வீட்டிலேயே குழிதோண்டி புதைத்துள்ளார். பின்னர் சுமிதாவும், சுமேரும் கேரளாவுக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே முருகதாசின் உடல், புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட வீட்டை போலீசார் நேற்று நேரில் பார்வையிட்டனர். இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் முருகதாசின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கள்ளக்காதலை கண்டித்த மீனவர் கொன்று உடல் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story