பழனி பகுதியில், குளங்களில் மராமத்து பணிக்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு


பழனி பகுதியில், குளங்களில் மராமத்து பணிக்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 3 July 2019 10:45 PM GMT (Updated: 3 July 2019 11:33 PM GMT)

பழனி பகுதியில் உள்ள குளங்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

நெய்க்காரப்பட்டி,

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதையடுத்து அந்தந்த பகுதியிலுள்ள நீர்நிலைகளை சீரமைத்து, அங்கு குடிமராமத்து பணிகளை விரைந்து மேற்கொள்ள பொதுப்பணித்துறைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் ஏரி, குளம், வரத்து வாய்க்கால்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழனி பகுதியிலும் பொதுப்பணித்துறையால் குளங்கள், வாய்க்கால்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் பாலாறு-பொருந்தலாறு அணை பாசன ஆதாரங்களான குளங்கள், வாய்க்கால்கள், கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க 2019-20-ம் ஆண்டுக்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் விஜயமூர்த்தி மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இரவிமங்கலம்குளம், புதுக்குளம் ஆகியவற்றில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.40 லட்சம், ரூ.40½ லட்சம் என தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் ரூ.69 லட்சத்தில் பொருந்தல்குளம், நடுங்குளம், ஆலங்குளம், பந்தல்தாங்கி குளம் ஆகிய குளங்களில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகின்றன.

மேற்கண்ட குளங்களில் நிலஅளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள கரைகளை பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும். இதன்மூலம் வடகிழக்கு பருவமழை பெய்யும் போது நீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்க முடியும் என்றனர்.

Next Story