விளாத்திகுளம் அருகே பயங்கரம் புதுமண தம்பதி சரமாரி வெட்டிக்கொலை காதல் திருமணம் செய்ததால் மர்மநபர்கள் வெறிச்செயல்


விளாத்திகுளம் அருகே பயங்கரம் புதுமண தம்பதி சரமாரி வெட்டிக்கொலை காதல் திருமணம் செய்ததால் மர்மநபர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 5 July 2019 4:00 AM IST (Updated: 4 July 2019 6:40 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே புதுமண தம்பதி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே புதுமண தம்பதி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்ததால் மர்மநபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

உப்பள தொழிலாளர்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் திருமேனி. இவருடைய மகன் சோலைராஜ் (வயது 23). பக்கத்து ஊரான பல்லாகுளத்தைச் சேர்ந்தவர் அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி (20). இவர் பிளஸ்–2 படித்து உள்ளார். இவர்கள் 2 பேரும் குளத்தூர்–கீழவைப்பார் ரோட்டில் உள்ள உப்பளத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு ஜோதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதல் திருமணம்

இந்த நிலையில் பெற்றோர்களுக்கு தெரியாமல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோலைராஜிம், ஜோதியும் குளத்தூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, குளத்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது சோலைராஜ், ஜோதி ஆகிய இருவரின் குடும்பத்தினரையும் போலீசார் வரவழைத்து, புதுமண தம்பதிக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தி, அவர்களிடம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.

திருமணத்துக்கு பின்னர் சோலைராஜ் தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். சோலைராஜ், பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கர்ப்பம் அடைந்த ஜோதி, மருத்துவ பரிசோதனைக்காக குளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.

படுகொலை

காற்றோட்டத்துக்காக சோலைராஜிம், ஜோதியும் இரவில் தங்களது வீட்டின் வளாகத்தில் தரையில் பாய் விரித்து படுத்து தூங்கி வந்தனர். அவர்களது வீட்டைச் சுற்றிலும் இரும்பு தகடாலான வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் கணவன்–மனைவி 2 பேரும் வீட்டின் வளாகத்தில் தரையில் பாய் விரித்து படுத்து தூங்கினர்.

அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், சோலைராஜின் வீட்டின் இரும்பு தகடாலான வேலியை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், வீட்டின் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த சோலைராஜ், ஜோதி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சோலைராஜ், ஜோதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் விசாரணை

மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியதில் ஜோதியின் இடது கை துண்டானது. சோலைராஜ், ஜோதி ஆகிய 2 பேருக்கும் கழுத்தில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன. சோலைராஜின் கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன. அவரது கைவிரல்களும் துண்டாகி சிதறி கிடந்தன. நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் சோலைராஜ், ஜோதி ஆகிய 2 பேரும் தங்களது வீட்டில் இருந்து வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது 2 பேரும் வீட்டின் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து உடனடியாக குளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

கொலை நடந்த இடத்தில் தரைப்பகுதி முழுவதும் ரத்தம் சிதறிக்கிடந்தது. கொலை நடந்த இடத்தில் பதிவான தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். மோப்ப நாய் மோப்பம் பிடித்து பக்கத்து தெரு வரையிலும் ஓடிச் சென்றது. ஆனாலும் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

பின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை கொலை செய்த கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

விளாத்திகுளம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

--–

(பாக்ஸ்)

--–

ஆணவக்கொலையா?

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட ஜோதியின் தந்தை அழகர். இவர், வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மகளின் காதல் விவகாரம் தெரியவந்ததும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அழகர் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் தன்னுடைய மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டார். அதற்கு முன்பாக அவர் தன்னுடைய மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவை நடத்த அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கியதாகவும், ஆனால் அதற்குள்ளாக ஜோதி, சோலைராஜை திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் அழகர் தன்னுடைய மகள் என்றும் பாராமல், புதுமண தம்பதியை ஆணவக்கொலை செய்தாரா?, இதற்கு வேறு யாரேனும் உடந்தையா? அல்லது அழகர் கூலிப்படையை ஏவி புதுமண தம்பதியை கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த உடன் அழகர் தலைமறைவாகி விட்டார். இதனால் இதற்கு காரணம் அவராக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மனைவியை படிக்க வைக்க விரும்பிய கணவர்

ஜோதி பிளஸ்–2 படித்து இருந்ததால், திருமணத்துக்கு பின்னர் அவரை கல்லூரியில் படிக்க வைக்க சோலைராஜ் விரும்பினார். ஆனால் ஜோதி பிறகு படித்து கொள்ளலாம் என்று கணவரிடம் கூறி உள்ளார். இந்த நிலையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட சோலைராஜ், ஜோதி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிணவறையில் அவர்களது உடல்கள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், புதுமண தம்பதியை படுகொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சோலைராஜின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவர்களுடைய உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சோலைராஜ், ஜோதி ஆகியோரின் உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மாலை வரையிலும் போராட்டம் நீடித்தது.


Next Story