மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 5 July 2019 3:45 AM IST (Updated: 4 July 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி, 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த மருத்துவ முகாமையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கல்வி அலுவலர் சத்தியசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் பழையபேட்டை காந்தி சிலை, 5 ரோடு ரவுண்டானா வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் நாராயணா தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சூசைநாதன், ராஜேந்திரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காவேரி, அகத்தியன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலம் குறித்து உதவி திட்ட அலுவலர் நாராயணா கூறியதாவது:-

பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கை, கால் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு, ஆட்டிசம், கற்றல் குறைபாடு, மூளை முடக்கு வாதம் உள்ளிட்ட 21 வகையான மாற்றத்திறன் மாணவர்களுக்கு (1-18 வயது) தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

அதன்படி, வருகிற 8-ந் தேதி கிருஷ்ணகிரி, 9-ந் தேதி கெலமங்கலம், 10-ந் தேதி பர்கூர், 11-ந் தேதி தளி, 12-ந் தேதி ஊத்தங்கரை, 15-ந் தேதி சூளகிரி, 16-ந் தேதி காவேரிப்பட்டணம், 17-ந் தேதி வேப்பனப்பள்ளி, 18-ந் தேதி மத்தூர், 19-ந் தேதி ஓசூர் ஆகிய ஒன்றிய வட்டார வள மையங்களில் நடைபெறுகிறது.

இதில் தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் 5 புகைப்படம், ஆதார் நகல், ரேசன் கார்டு நகல், பள்ளி சான்றுடன் வரவேண்டும். முகாமில் பயணப்படி, தேநீர், பிஸ்கட், மதிய உணவு வழங்கப்படும். முகாமில், காதொலி கருவி, சக்கர நாற்காலி, சி.பி.சேர், ரேலேட்டர், காலிபர், ஊன்றுகோல், மூன்று சக்கர வண்டி மற்றும் கல்வி உதவித்தொகை, மாத உதவி தொகை, பஸ் பாஸ், ரெயில் பாஸ், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஊர்வலத்தின் போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story