எருமப்பட்டி அருகே பரபரப்பு பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் காயம்
எருமப்பட்டி அருகே பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 மாணவிகள் காயம் அடைந்தனர்.
எருமப்பட்டி,
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக மணிமேகலை என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் கழிவறை சேதமடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கட்டிடத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் மழை காலங்களில் கழிவறையின் சுவர் நனைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர். மாலை 3.50 மணியளவில் மாணவிகள் பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த செல்லவேல் மகள் 5-ம் வகுப்பு படிக்கும் காயத்திரி (வயது 10) மற்றும் பெருமாள் மகள் கனிஷ்கா (10) ஆகியோர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாணவிகள் கழிவறை கதவை திறந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் கதவுடன் சேர்ந்து இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி மாணவிகள் 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் வலி தாங்க முடியாமல் அய்யோ அம்மா காப்பாற்றுங்கள் என அலறி துடித்தனர். இதையடுத்து மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அங்கு வந்தனர். இதேபோல் பள்ளிக்கு அருகே இருந்த பொதுமக்களும் அங்கு ஓடி வந்தனர்.
பின்னர் அவர்கள் இடிபாடுகளில் சிக்கி தவித்த காயத்திரி, கனிஷ்கா ஆகியோரை மீட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த ஆம்புலன்சில் மாணவிகள் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆஸ்பத்திரியில் மாணவிகளுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவிகள் 2 பேரும் மேல்சிகிச்கைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாணவிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story