காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை


காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 5 July 2019 3:30 AM IST (Updated: 4 July 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஓமலூர், 

ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் போதிய இடவசதி இல்லாமல் ஒரே வீட்டில் 2 குடும்பத்தினர், 3 குடும்பத்தினர் என ஒன்றாக வசித்து வருவதாகவும், இதனால் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரி காடையாம்பட்டி தாசில்தார் மகேஸ்வரியிடம் மனு கொடுத்து இருந்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் இடங்களை ஆய்வு செய்து, அதில் காலியிடத்தை தேர்வு செய்து தான் வீட்டுமனை பட்டா கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறமுள்ள மயானத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு வந்த அவர்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் மயான பகுதியில் பட்டா வழங்க இயலாதெனவும், அரசு புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Next Story