பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை


பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 July 2019 10:45 PM GMT (Updated: 4 July 2019 6:47 PM GMT)

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப் படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்து உள்ளார்.

கோத்தகிரி,

தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கோத்தகிரி பஸ் நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். பின்னர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்குள்ள உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து பஸ் நிலையத்தில் தூய்மையை கடைபிடிப்பது குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் பொதுமக்களிடையே கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இந்த பணி சுகாதார பணியாளர்களுடையது என நினைத்து ஒதுங்கி விடக்கூடாது.

அவர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். வீடுகளுக்கு குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் அல்லது மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.

இதை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அதே தவறை செய்தால் மின்சாரம், குடிநீர் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்படும்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களை கண்டறிந்து, உடனடியாக ரூ.1000 அபராதம் விதித்து வசூலிக்க பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு கடை உரிமையாளர்களும், தனது கடை அமைந்துள்ள பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதற்கு தினமும் 1 மணி நேரம் ஒதுக்கி தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். இதுபோன்ற செயல்களால் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகளவில் மரக்கன்றுகளை நடுவதை குறிக்கோளாக கொண்டு அனைத்து தன்னார்வ அமைப்பினரும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து தூய்மை பாரத திட்ட விளக்க பிரசுரத்தை கலெக்டர் வெளியிட, அதனை பேரூராட்சிகளின் துணை இயக்குனர் மனோரஞ்சிதம் பெற்று கொண்டார். பின்னர் மிஷன் காம்பவுண்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலை பள்ளியில் கட்டப்பட்ட புதிய ஆய்வு கூடத்தை கலெக்டர் திறந்து வைத்து, தாங்கள் கல்வி பயிலும் இடம் மற்றும் வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று மாணவ-மாணவிகளிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் சோலை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இதைத்தொடர்ந்து ரைபிள் ரேஞ்சு பகுதியில் நீராதார ஆக்கிரமிப்புகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டனர். மேலும் அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கீழ் கோத்தகிரி, எஸ்.கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.

இதில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பாபு, தாசில்தார் சங்கீதா ராணி, சுகாதார ஆய்வாளர் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story