ரூ.15 கோடியில் குடிமராமத்து பணி கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குடிமராமத்து பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1,829 பணிகள் ரூ.499 கோடியே 68 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் 134 பணிகள் ரூ.15 கோடியில் செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள் அல்லது நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் அல்லது பாசனதாரர்கள் தொகுப்பு மூலமாக பணிகளை செயல்படுத்த அரசு உரிய வழிமுறைகள் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தில் கால்வாயில் வளர்ந்துள்ள செடிகொடிகள், முட்புதர்களை அகற்றுதல், கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்தல், கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு கட்டிடங்களை பழுது பார்த்தல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல், பழுதடைந்த ஷட்டர்களை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பங்கேற்பு பாசன மேலாண்மையில் விவசாயிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பங்களிப்பாக மதிப்பீட்டு தொகையில் 10 சதவீதம் பணமாகவோ, மனித உழைப்பாகவோ அல்லது பொருளாகவோ வழங்க வேண்டும். மீதம் உள்ள 90 சதவீதம் அரசின் நிதியாக கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் ஆழியாறு வடிநில கோட்டத்தின் மூலமாக 53 பணிகள் ரூ.6 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலும், திருமூர்த்தி கோட்டத்தின் மூலமாக 54 பணிகள் ரூ.4 கோடியே 43 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலும், பவானி வடிநில கோட்டத்தின் மூலமாக 5 பணிகள் ரூ.86 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், அமராவதி வடிநில கோட்டத்தின் சார்பில் 22 பணிகள் ரூ.3 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலும் பதிவு பெற்ற பாசன சங்கங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த குடிமராமத்து பணிகள் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், காங்கேயம், திருப்பூர் தெற்கு தாலுகா பகுதிகளில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 663 ஹெக்டேர் பாசன நிலங்கள் பயன்பெறும். வேளாண் பெருமக்கள் இந்த திட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், இந்த திட்டம் குறித்து விவசாயிகளுக்கும், பாசன சங்க பிரதிநிதிகளுக்கும் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், செயற்பொறியாளர்கள் முத்துசாமி(ஆழியாறு வடிநில கோட்டம்), தாமோதரன்(பவானி வடிநில கோட்டம்), தர்மலிங்கம்(அமராவதி வடிநில கோட்டம்), அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story