தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனையாகும் கயிறுகள் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிப்பு


தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனையாகும் கயிறுகள் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 5 July 2019 3:15 AM IST (Updated: 5 July 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கயிறுகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

குடிமங்கலம், 

தமிழகத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் சுமார் 3½ லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தேங்காய் மட்டைகளில் தென்னை நார் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உடுமலை, குடிமங்கலம் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகளும், தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் ஒரு சில தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது.

இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் பெரும்பாலும் கேரளாவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் தேங்காய் விளைச்சல் அதிகம் இருந்தும் தென்னை நார் உற்பத்தி, கயிறு உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. கேரளாவில் அடிக்கடி மழை பெய்வதால் தென்னை நார் உலர வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. கேரளாவில் ரப்பர் உற்பத்தி அதிகமாக இருப்பதால் கால்மிதியடி தயாரிக்கப்படுகிறது. கால்மிதியடி தயாரிப்புக்கு கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தமிழகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

தேங்காய் மட்டையை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றி விற்பனை செய்வதால் ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் ஏற்றுமதியும், உள்நாட்டில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தொழில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து குடிமங்கலம் பகுதியில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர் முத்துக்குமார் கூறியதாவது:-

கயிறு தயாரிப்பதற்கு தென்னை நார் மூலப்பொருளாக உள்ளது. தற்போது தேங்காய் மட்டை விலை உயர்ந்து உள்ளதால் தென்னை நார் விலை உயர்ந்து உள்ளது. 30 கிலோ கொண்ட முதல் தர தென்னை நார் ரூ.650 ஆக உள்ளது. மேலும் எந்திரத்தின் மூலம் பிரித்து எடுத்து கயிறாக திரிக்கப்படுகிறது. இதை 10 கிலோ கொண்ட பண்டல்களாக மாற்றப்பட்டு கேரளாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பண்டல் ரூ.420 வரை விற்பனையாகிறது.

கயிறு தொழிற்சாலைகளில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்களை கொண்டு பணி செய்ய வேண்டி நிலை உள்ளது. முதலில் சில மாதங்கள் பயிற்சி காலமாக அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.300 வழங்கப்படுகிறது. அதன்பிறகு நாளொன்றுக்கு ரூ.400 வழங்கப்படுகிறது. 15 எச்.பி. மோட்டார் வரை பயன்படுத்தும் உற்பத்தியாளர்களுக்கு 500 யூனிட் வரை ரூ.4-ம் அதற்கு மேல் ரூ.4.80 மின்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கயிறுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. கயிறு நிறம் மாறாமல் ஈரப்பதம் இல்லாமல் உற்பத்தி செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story