தஞ்சை எம்.கே. மூப்பனார் சாலையில் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி அதிவேகத்தில் செல்லும் வாலிபர்கள் போலீசார் எச்சரிக்கை


தஞ்சை எம்.கே. மூப்பனார் சாலையில் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி அதிவேகத்தில் செல்லும் வாலிபர்கள் போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 July 2019 10:45 PM GMT (Updated: 4 July 2019 7:29 PM GMT)

தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி அதிவேகத்தில் சென்று வருகிறார்கள். இனிமேல் இவ்வாறு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலை, மிஷன்சர்ச் ரோடு, பிளேக் மேல்நிலைப்பள்ளி சாலை, வண்டிக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் சென்று வருகிறார்கள். இந்த பகுதியில் தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, அரசு பள்ளி ஆகியவை உள்ளன. குறிப்பாக பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்லும் நேரத்திலும், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்திலும் இது போன்று வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று வருகிறார்கள். வாகனங்களில் அதிக ஒலியெழுப்பியபடி கண்மூடித்தனமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்கிறார்கள். இவர்கள் வரும் வேகத்தை பார்த்து எதிரில் வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பதபதைத்து போய் விடுகிறார்கள். மேலும் வாலிபர்கள் இவ்வாறு வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எம்.கே. மூப்பனார் சாலையில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் நாள்தோறும் அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிளில் பள்ளிகளின் முன்பு வேகமாக செல்லும் வாலிபர்கள் திடீரென சாகசத்திலும் ஈடு படுகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டே தங்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். மோட்டார் சைக்கிள் வாலிபர்களின் இந்த அட்டூழியம் நாள்தோறும் நடந்து வருவதால் பள்ளிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் பீதியுடனேயே சென்று வருகிறார்கள்.

மேலும் இந்த பகுதிகளில் குடியிருப்புகளும் அதிகமாக உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இந்த சாலைகளில் இது போன்று மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் செல்லும் வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து நேற்று போக்குவரத்து போலீசார் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போக்குவரத்து போலீசார், இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர்கள் உள்ளிட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது டிரைவிங் லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள், வேகமாக வாகனம் ஓட்டியவர்கள் உள்ளிட்டவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும். சோனையின்போது யாராவது மோட்டார் சைக் கிளில் வேகமாக செல்வது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story