திருமண கோஷ்டி சென்ற வேன் ஏரியில் கவிழ்ந்தது மணமக்கள் உள்பட 25 பேர் படுகாயம்


திருமண கோஷ்டி சென்ற வேன் ஏரியில் கவிழ்ந்தது மணமக்கள் உள்பட 25 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 July 2019 4:30 AM IST (Updated: 5 July 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் ஏரியில் கவிழ்ந்ததில் மணமக்கள் உள்பட 25 பேர் படுகாய மடைந்தனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பழமலைநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகள் அனிதாவிற்கும், காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமாருக்கும் நேற்று காலை காசாங்கோட்டை கிராமத்தில் திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து மணமக்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர், மணமகள் வீட்டில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க பழமலைநாதபுரம் நோக்கி நேற்று மாலை ஒரு வேனில் சென்றனர்.

வேனை செந்துறை அருகே உள்ள குறிச்சிக்குளத்தை சேர்ந்த சரவணன்(வயது 37) ஓட்டினார். செந்துறை அருகே உள்ள நமங்குணம் பெரிய ஏரிக்கரை என்ற இடத்தில் சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் உள்ள ஏரியில் இறங்கி கவிழ்ந்தது.

25 பேர் படுகாயம்

இந்த விபத்தில் வேனில் இருந்த மணமக்கள் அனிதா, சதீஷ்குமார் மற்றும் அனிதாவின் உறவினர் பழனிவேல், 3 குழந்தைகள் உள்பட 25 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பழனிவேல் உள்பட 3 பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமக்கள் வீட்டிற்கு திரும்பினர். திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல், வறண்ட நிலையில் உள்ளது. தண்ணீர் இருந்திருந்தால் வேனில் இருந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம். தண்ணீர் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் விசாரணை

இது தொடர் பாக செந்துறை போலீசார், வேன் டிரைவர் சரவணனிடம் விசாரணை நடத்தினர். வேனின் ஸ்டியரிங் பட்டை உடைந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story