விழுப்புரத்தில், நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - தம்பதி அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர்


விழுப்புரத்தில், நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - தம்பதி அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 5 July 2019 4:15 AM IST (Updated: 5 July 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தம்பதி அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விழுப்புரம்,

சேலம் மாவட்டம் மகேந்திரபுரி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50). இவருடைய மனைவி புவனேஸ்வரி (45). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தங்களது ஆம்னி காரில் சேலத்தில் இருந்து காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

பின்னர் இருவரும் நேற்று காலை காஞ்சீபுரத்தில் இருந்து சேலத்திற்கு புறப்பட்டனர். காரை பாஸ்கரன் ஓட்டினார். இவர்களது கார் நேற்று காலை 10 மணியளவில் விழுப்புரம் ஜானகிபுரம் புற வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது காரின் பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டு என்ஜினில் இருந்து புகை கிளம்பியது. உடனே இருவரும் காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடத்தில் அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த சமயத்தில் பலத்த காற்று வீசியதால் தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இதுகுறித்து அவர்கள் விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. காரில் இருந்து புகை கிளம்பியதும் பாஸ்கரனும், அவரது மனைவி புவனேஸ்வரியும் கீழே இறங்கியதால் இருவரும் காயமின்றி அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தொடர்ந்து, விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மீட்பு வாகனத்தை வரவழைத்து தீயில் எரிந்து சேதமடைந்த காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி காலை 10.20 மணியளவில் போக்குவரத்தை சீர்செய்தனர்.

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story