மது குடிக்கும் பழக்கத்தை கணவர் கைவிடாததால் - தீக்குளித்து பெண் தற்கொலை
மது குடிக்கும் பழக்கத்தை கணவர் கை விடாததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 35), நகை தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த மீனாட்சியும் (30) ஒருவரையொருவர் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 வயதில் பிரசன்னா என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜா, தினசரி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறு ராஜாவிடம் அவரது மனைவி மீனாட்சி பலமுறை கூறியுள்ளார். ஆனால் அவர் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை என தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மீனாட்சி, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில் வலியால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் மீனாட்சியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மீனாட்சி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story