என்.ஆர்.புராவில் 50 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்து காட்டு யானை செத்தது


என்.ஆர்.புராவில் 50 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்து காட்டு யானை செத்தது
x
தினத்தந்தி 5 July 2019 4:29 AM IST (Updated: 5 July 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

என்.ஆர்.புராவில் 50 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்து காட்டு யானை ஒன்று செத்துள்ளது. அந்த யானையை வனத்துறையினர் விரட்டி சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு, 

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர் அருகே ஹரம்பி கிராமம் பத்ரா வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் பத்ரா வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் வெளியேறி ஹரம்பி கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தன.

இதனால் பீதியடைந்த அந்தப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். மேலும் அந்த காட்டு யானைகளை பிடிக்க வேண்டும் என்று அவர்கள் வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அந்த காட்டு யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹரம்பி கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் ஒரு காட்டு யானை நிற்பதாக அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதியில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது.

இதனால் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். அந்த யானையும் வனப்பகுதிக்குள் ஓடியது.

அந்த சமயத்தில் வனப்பகுதிக்குள் ஓடிய அந்த யானை, 50 அடி உயர பாறையில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அந்த யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த யானை பரிதாபமாக செத்தது.

இதையடுத்து அதேப்பகுதியில் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அங்கு குழித்தோண்டி யானையை வனத்துறையினர் புதைத்தனர். இது 50 வயது நிரம்பிய ஆண் யானை ஆகும். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story