காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பின்னணியில் மோடியா? சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பின்னணியில் மோடியா? சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 July 2019 4:46 AM IST (Updated: 5 July 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பின்னணியில் மோடி இருப்பதாக கூறிய சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறார்கள். கர்நாடகத்தில் உள்ள கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியை அவர்கள் மேற்கொள்ளவில்லை. ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்ட சித்தராமையா, குமாரசாமி முதல்-மந்திரி பதவியில் இருப்பதை சகித்துக்கொள்ள முடியாமல் அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார்.

கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும் என்று மோடி நினைத்தால், எம்.எல்.ஏ.க் களை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை இந்த அரசு கவிழ்ந்தால், பா.ஜனதா ஆட்சி அமைப்பது பற்றி யோசிப்போம்.

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீது சித்தராமையா குற்றம்சாட்டுவது சரியல்ல. மோடியை குறை கூறாவிட்டால் சித்தராமையா உள்பட சிலருக்கு சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாது. இந்த குற்றச்சாட்டை கூறியதற்காக சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த மகதேவ் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய பா.ஜனதாவினர் ரூ.30 கோடி பணத்தை கொடுக்க முன்வந்தனர் என்று கூறியுள்ளார். நாட்டில் எங்கள் கட்சிக்கு 11 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அதில் அவரிடம் கொடுக்க யார் பணம் எடுத்து வந்தது என்று அவர்தான் சொல்ல வேண்டும்.

ரூ.30 கோடி என்பது விளையாட்டு கிடையாது. சிலர் தங்களின் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள இவ்வாறு தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். பதவியை ராஜினாமா செய்ய ரூ.8 கோடி போதும் என்று அவர், எங்களிடம் வந்து கூறியதாக சொன்னால் அவரது மரியாதை என்னவாகும்.

தனக்கு பணம் கொடுக்க வந்தவர்கள் பற்றி லோக் ஆயுக்தா அல்லது ஊழல் தடுப்பு படையில் மகதேவ் புகார் அளிக்க வேண்டும். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டியது அவசியம். காங்கிரசில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. அந்த கட்சியில் இருக்கும் தலைவர்களிடம் நேர்மை இல்லை. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் வந்தாலும், அவர் செயல்படாத தலைவராக தான் இருப்பார். 2 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வருவார். காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி கட்சிகள் தங்களின் தவறுகளை மூடிமறைக்க பா.ஜனதா மீது குறை கூறுகிறார்கள். காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதை தடுக்க முடியாது.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

Next Story