பழனி பகுதியில், குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு
பழனி தாலுகா பகுதியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் பழனி தாலுகா பகுதியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி அய்யம்புள்ளி குளம், பஞ்சந்தாங்கி குளம், நடுக்குளம், பொருந்தல்குளம், சண்முகநதி ராஜவாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளத்தின் பரப்பு, பயன்பெறும் பாசன நிலங்கள், மதகுகளின் நிலை, நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். பின்னர் இந்த ஆய்வு குறித்து கலெக்டர் கூறியதாவது:-
குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தாலுகா வாரியாக பழனியில் 40 குளங்கள், 6 கால்வாய்கள், ஒட்டன்சத்திரத்தில் 9 குளங்கள், 1 கால்வாய், ஆத்தூரில் 14 குளங்கள்,1 கால்வாய், நத்தத்தில் குளம் மற்றும் வாய்க்கால் சீரமைக்கும் 27 பணிகள், திண்டுக்கல்லில் 1 பணி, கொடைக்கானலில் 2 பணி, நிலக்கோட்டையில் 6 பணிகள் மற்றும் கரைகளில் செடிகளை அகற்றுதல், மதகுகளை பழுது பார்க்கும் பணிகள் உள்ளிட்ட 114 பணிகள் ரூ.34 கோடியே 35 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ரூ.10 லட்சத்துக்கு கீழ் உள்ள திட்டப்பணிகள் அந்தந்த பாசன சங்கங்கள், முன்னோடி விவசாயிகள் மூலம் நியமன முறையில் வழங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதற்கு விவசாயிகளின் பங்களிப்பாக மதிப்பீட்டு தொகையில் 10 சதவீதம் தொகையை தொழிலாளர்கள் வடிவத்திலோ அல்லது பொருளாகவோ, ரொக்கமாகவோ செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக அவர் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story