வியாபாரிகளுக்கு முன்னுரிமை, பழனி உழவர்சந்தை அதிகாரியை முற்றுகையிட்ட விவசாயிகள்
வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறி பழனி உழவர்சந்தை அதிகாரியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
பழனி,
பழனி சண்முகபுரம் பகுதியில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பழனி சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். காய்கறிகள் தரமானதாகவும், சந்தை விலையை காட்டிலும் குறைவாக இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் தினமும் இங்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் இங்கு காய்கறிகளை விற்பனை செய்யும் சிறு, குறு விவசாயிகளிடம் உழவர்சந்தை அதிகாரி பாரபட்சம் காட்டுவதாக வும், மொத்த வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் உழவர்சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். இதனால் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு விற்பனை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றும் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் உழவர்சந்தை அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேளாண் அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுபோன்ற தவறுகள் இனிமேல் ஏற்படாத வண்ணம் கண்காணிக்கப்படும் என வேளாண் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் உழவர்சந்தை பகுதியில் சிறிது நேரம் வியாபாரம் பாதிப்படைந்தது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
Related Tags :
Next Story