சின்னாளப்பட்டி அருகே இருதரப்பினர் மோதல், போலீசார் தாக்கியதாக கூலித்தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி - கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


சின்னாளப்பட்டி அருகே இருதரப்பினர் மோதல், போலீசார் தாக்கியதாக கூலித்தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி - கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 July 2019 4:00 AM IST (Updated: 5 July 2019 5:08 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளப்பட்டி அருகே இருதரப்பினர் மோதலில் போலீசார் தாக்கியதாக கூலித்தொழிலாளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதை அறிந்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி கிராமம் உள்ளது. இங்கு புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நடைபெற்றது. அப்போது அன்னதானம் வழங்கப்படும் இடம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றபோது மோதல் உருவாகி கல்வீச்சு சம்பவம் நடந்தது.

இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதையடுத்து ஆலய திருவிழாவும் நடைபெற்றது. இதற்கிடையே திருவிழாவில் சிலருக்கு இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சிலரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அதில் பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆரோக்கியசாமியும் (வயது 39) ஒருவர். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அவரை போலீசார் தாக்கியதாகவும், அதில் காயமடைந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர், நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அதை அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், அங்கு விரைந்து வந்தனர். மேலும் கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆரோக்கியசாமியை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் முறையிட்டனர்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story