மழை வெள்ளத்தில் நடந்து சென்றவர்கள் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் : மும்பை மாநகராட்சி அறிவுறுத்தல்
மழை வெள்ளத்தில் நடந்து சென்றவர்கள எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்தை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
மும்பை,
மும்பையில் ஆண்டுதோறும் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோய்க்கு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தேங்கி நிற்கும் மழைநீரில் கலந்து விடும் எலிகள் மற்றும் கால்நடைகளின் சிறுநீர் மற்றும் கழிவுகள் மூலம் லெப்டோஸ்பைரா என்ற பாக்டீரியாவால் இந்த நோய் பரவுகிறது.
இந்தநிலையில், மும்பையில் 5 நாட்களாக கொட்டிய கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. பலரும் தேங்கிய மழைநீரின் வழியாக நடந்து செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
தேங்கிய மழைநீரில் நடந்து சென்றவர்கள் எலிக்காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு மருந்து எடுத்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகளை மக்கள் தேங்கிய மழைநீரில் நடந்து சென்ற 24 மணி முதல் 72 மணி நேரத்தில் எடுத்து கொள்ளவேண்டும். இந்த தடுப்பு மருந்துகள் மாநகராட்சி ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், சுகாதார மையங்களில் வினியோகம் செய்யப்படுகின்றன.
காலில் காயத்துடன் தேங்கிய மழைநீரில் நடந்து சென்றவர்கள் கட்டாயம் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story