உரிமம் பெறாமல் விதைகள் விற்றால் 7 ஆண்டு ஜெயில் - அதிகாரி எச்சரிக்கை


உரிமம் பெறாமல் விதைகள் விற்றால் 7 ஆண்டு ஜெயில் - அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 July 2019 11:15 PM GMT (Updated: 5 July 2019 12:09 AM GMT)

உரிமம் பெறாமல் விவசாயிகளுக்கு விதைகள் விற்பனை செய்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார். விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் நாச்சியார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோடை உழவு போன்ற விவசாய பணிகள் நடைபெற தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து முக்கிய ஈடுபொருளான விதைகளின் இருப்பு, தரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் விதை ஆய்வாளர்கள் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விதைகளின் தரத்தை உறுதி செய்ய விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

விதைகள் விற்பனை செய்ய உரிய உரிமம் பெறுவது கட்டாயம் ஆகும். உரிமம் இல்லாமல் விதைகள் விற்பனை செய்வது விதைகள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடுமையான குற்றம் ஆகும். எனவே உரிமம் பெறாமல் விதைகள் விற்பனை செய்தால் இச்சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்கள் உரிய கொள்முதல் படிவம் பட்டியல்கள் இல்லாமல் விதைகளை வாங்கி இருப்பு வைக்ககூடாது. வெளிமாநில விதைகளை படிவம்-2 என்ற சான்று இல்லாமல் விற்பனை செய்யகூடாது. விதைகள் இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை பதிவேடு முதலியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் விவசாயிகள் முறையான விற்பனை உரிமம் பெறாத விற்பனையாளர்களிடம் விதைகளை வாங்கி பயிரிட்டு இழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் விதைகள் வாங்கும்போது குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு ரசீது பெற்றே விதைகள் வாங்கி பயிரிட வேண்டும். இதுபற்றி மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story