பட்டாசு தொழிலாளி கொலை, மனைவி, கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது
சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி உறிஞ்சுகுளம் கண்மாயில் நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து சிவகாசி கிழக்கு போலீசார் அந்த கண்மாய் பகுதிக்கு சென்று பிணமாக கிடந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் முதலிப்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பதும், இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் செந்தில்குமார் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் செந்தில்குமாரின் தந்தை முருகன் சிவகாசி கிழக்கு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது மகன் மரணத்தில் ஆலாவூரணியை சேர்ந்த சீனிபாண்டி, அவரது தம்பி வேல்சாமி, நண்பர்கள் விக்னேஷ் மற்றும் 17 வயது வாலிபர், செந்தில்குமாரின் மனைவி ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிவித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக புகாரின் கூறப்பட்ட நபர்களை அழைத்து வந்து தனித்தனியாக விசாரித்தனர்.
இதில் செந்தில்குமாரை அவர்கள் தான் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சீனிபாண்டி, செந்தில்குமார் மனைவி லட்சுமி(27) உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
செந்தில்குமாருக்கும், லட்சுமிக்கும் கடந்த 2013-ல் திருமணம் நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் மும்பைக்கு சென்று வேலை தேடி உள்ளார். ஆனால் அங்கு போதிய வருமானம் கிடைக்காததால் சிவகாசிக்கு வந்து பட்டாசு ஆலையில் வேலை பார்த்துள்ளார்.
செந்தில்குமார் மும்பை சென்றபோது லட்சுமிக்கும், அவரது உறவினரான சீனிபாண்டிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மும்பையில் இருந்து செந்தில்குமார் சிவகாசிக்கு திரும்பியது இவர்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்துள்ளது. இந்தநிலையில் கள்ளக்காதல் விவகாரம் அவருக்கு தெரியவந்ததும், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த தகவல் லட்சுமி மூலம் சீனிபாண்டிக்கு தெரியவந்ததும் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் செந்தில்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக தனது தம்பி வேல்சாமியின் உதவியை நாடினார். அவர் தனது நண்பர்கள் விக்னேஷ் மற்றும் 17 வயது வாலிபருடன் அதற்கான திட்டத்தை தீட்டி செந்தில்குமாரை கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் பிணத்தை அதே பகுதியில் போட்டுவிட்டு தப்பியோடி விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story