100 சதவீத மானியத்தில், பண்ணைக்குட்டைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்


100 சதவீத மானியத்தில், பண்ணைக்குட்டைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 5 July 2019 4:15 AM IST (Updated: 5 July 2019 5:39 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு தகுதியுடைய விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராமநாதபுரம்,

விவசாயத்தில் பண்ணைக்குட்டையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் 2018-19-ம் மற்றும் 2019-20-ம் ஆண்டுகளில் 10,000 பண்ணைக்குட்டைகள் ரூ.100 கோடி செலவில் அமைக்க தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 3000 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2018-19-ம் ஆண்டில் இம்மாவட்டத்தில் 486 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 2,575 பண்ணைக்குட்டைகளை இம்மாவட்டத்தில் அமைக்க தற்போது ரூ.25 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பண்ணைக்குட்டையை நீர் ஆதாரமாக கொண்டு தெளிப்பு நீர் பாசன அமைப்பை நிறுவி, பயிர்களுக்கு சிக்கனமான முறையில் நீர் பாய்ச்சுவதன் மூலம் கூடுதலான பரப்பில் பாசன வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். பண்ணைக்குட்டைகளில் மீன்கள் வளர்த்து அதன்மூலம் கூடுதல் வருமானத்தையும் விவசாயிகள் பெறலாம். சுமார் 45 சென்ட் பரப்பளவில், 30 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும், 2 மீட்டர் ஆழமும் கொண்ட பண்ணைக்குட்டை அமைத்தால் 18 லட்சம் லிட்டர் நீர் சேமிக்கப்படுகிறது.

இந்த அளவு நீரைக்கொண்டு 5 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிருக்கு 3 அல்லது 4 முறை நீர் பாய்ச்சலாம். 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் மற்றும் 2 மீட்டர் ஆழம் கொண்ட பண்ணைக்குட்டை அமைக்க ரூ.1 லட்சம் செலவாகிறது. இப்பண்ணைக்குட்டைகள் 100 சதவீத மானியத்துடன் அரசு செலவில் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகிறது. பண்ணைக்குட்டையின் நீளம், அகலம் மற்றும் ஆழத்தை நிலத்தின் அமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.

அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ் பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்கள் அல்லது வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது பரமக்குடி கொல்லம்பட்டறை தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றில் விவசாயிகள் தங்களது பட்டா நகல், அடங்கல் மற்றும் புலவரைபட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார். 

Next Story