மாவட்டத்தை முன்னேற்றுவதற்கான வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை - மத்திய அரசின் கூடுதல் அரசு செயலாளர் தகவல்
மாவட்டத்தை முன்னேற்றுவதற்கான வளர்ச்சிப்பணிகள் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசின் கூடுதல் அரசு செயலாளர் கூறினார்.
விருதுநகர்,
மத்திய அரசு நாடு முழுவதும் 117 மாவட்டங்களை முன்னேற துடிக்கும் மாவட்டமாக தேர்வு செய்து 3 ஆண்டுகளில் இம்மாவட்டங்களை முன்னேறிய மாவட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் இந்த பட்டியலில் இடம்பெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, திறன் வளர்ப்பு, அடிப்படை கட்டுமானம், நிதிநிலை சேர்ப்பு(அனைவருக்கும் வங்கி சேவை) ஆகிய துறைகளில் தனிக்கவனம் செலுத்தி அந்த துறைகளை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் மத்திய அரசின் கூடுதல் அரசு செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. கலெக்டர் சிவஞானம் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் கல்வித்துறையில் 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுகள், பள்ளிகளின் கழிப்பறை வசதிகள் அதன் பராமரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகள், ஊட்டச்சத்துத் துறையில் கர்ப்பிணிகளின் பேறுகால உடல் பரிசோதனைகள், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட செயல்பாடுகள், வேளாண்மைத்துறையில் சொட்டுநீர் பாசனம் மற்றும் அது தொடர்பாக விவசாயிகளிடம் ஏற்படுத்தப்பட வேண்டிய விழிப்புணர்வு உள்ளிட்ட செயல்பாடுகள், நிதி மேலாண்மையில் பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள கணக்குகளின் எண்ணிக்கை மற்றும் முத்ரா யோஜனா திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கடன் வசதிகள் உள்ளிட்ட செயல்பாடுகள், உள்கட்டமைப்புத்துறையில் ஊராட்சி சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மத்திய அரசின் கூடுதல் அரசு செயலாளர் பிரவீன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் பேசும்போது, விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு, புதிதாக சிந்தித்து, அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதைதொடர்ந்து, விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊட்டச்சத்து முறைகள், முன்பருவக் கல்வி குறித்து கேட்டறிந்தார். பின்னர், சாத்தூர் நடுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், இணை இயக்குனர்(மருத்துவப் பணிகள்) மனோகரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், திட்ட அலுவலர்(ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) பத்மாசனி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story