இளையான்குடி அருகே, தலைமையாசிரியரை மாற்றியதால் மாணவ-மாணவிகள் போராட்டம்


இளையான்குடி அருகே, தலைமையாசிரியரை மாற்றியதால் மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 5 July 2019 4:00 AM IST (Updated: 5 July 2019 5:39 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே பள்ளி தலைமையாசிரியரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளையான்குடி, 

இளையான்குடி ஒன்றியத்திற்குட்பட்டது காரைக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5 வகுப்புகள் வரை உள்ளன. சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 35 மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்து பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 19 ஆண்டுகளாக இந்த பள்ளியின் தலைமையாசிரியராக ஆரோக்கியம் என்பவர் பணியாற்றி வந்தார்.

அவர் முழு ஈடுபாட்டுடன் பணி செய்து மாணவர்களை படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தி உற்சாகப்படுத்தி வந்தார். இதனால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் தலைமையாசிரியரிடம் மிகுந்த மரியாதையுடன் பழகி வந்தனர். இதையறிந்து பக்கத்து கிராமங்களில் உள்ள மாணவர்களை அவர்களின் பெற்றோர் இந்த பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்தநிலையில் நடப்பு கல்வியாண்டில் தலைமையாசிரியர் ஆரோக்கியம், அருகில் உள்ள பெரும்பாலை கிராமத்தில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பள்ளி தலைமையாசிரியரை மீண்டும் இதே பள்ளியில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி கடந்த 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை பள்ளிக்கு வந்த 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்து பள்ளி வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போராட்டத்தை முடித்து விட்டு பாதியில் வீடு திரும்பினர். இது குறித்து பெற்றோர்கள் தரப்பில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டது. மேலும் தலைமையாசிரியர் மீண்டும் அதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

Next Story