கர்நாடகத்தில் காங்கிரசில் இருந்து மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் விலகலா? பரபரப்பு தகவல்
கர்நாடகத்தில் காங்கிரசில் இருந்து மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் விலக தயாராக இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடந்து வருகிறது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்த அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்து தற்போது 2–வது ஆண்டில் இருக்கிறது. கடந்த ஓராண்டில் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா ஆபரேஷன் தாமரை (காங்கிரஸ்–ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுத்தல்) மூலம் முயற்சி செய்தது.
ஆனால் அந்த முயற்சியை கூட்டணி அரசு வெற்றிகரமாக முறியடித்தது. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, பா.ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் மகனுடன் நடத்திய பேரம் ஆடியோ உரையாடல் பதிவு வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் கர்நாடக பா.ஜனதாவுக்கு கடும் இக்கட்டான நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் அத்துடன் அந்த முயற்சியை பா.ஜனதா தற்காலிகமாக ஒத்திவைத்தது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வரலாறு காணாத வெற்றியை பெற்றது. அதனால் இந்த முறை எப்படியும் கூட்டணி அரசை கவிழ்த்துவிடலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் கணக்கு போட்டுள்ளனர்.
இதற்காக மிகுந்த எச்சரிக்கையுடன் அக்கட்சி தலைவர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள். அதன்படி காங்கிரஸ்–ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பணியை இந்த முறை டெல்லியில் உள்ள பா.ஜனதா மேலிட தலைவர்களில் ஒருவர் மறைமுகமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடியூரப்பா கூறி வருகிறார்.
ராஜினாமா கொடுத்த நாள் அன்று கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அரசியலில் நீடித்த பரபரப்பு அடங்கிவிட்டது. இந்த நிலையில் அடுத்து வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுமார் 10 எம்.எல்.ஏ.க்கள் வரை தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகவும், காங்கிரசில் இருந்து விலகி உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதனால் கூட்டணி அரசு நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகும்.