தமிழக அரசிடம் உரிய அனுமதி பெறாததால் கொம்மந்தான்மேடு பாலம் அமைக்கும் பணி திடீர் நிறுத்தம்


தமிழக அரசிடம் உரிய அனுமதி பெறாததால் கொம்மந்தான்மேடு பாலம் அமைக்கும் பணி திடீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 July 2019 6:10 AM IST (Updated: 5 July 2019 6:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பொதுப்பணித் துறையிடம் உரிய அனுமதி பெறாததால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கொம்மந்தான்மேட்டில் பாலம் அமைக்கும் பணி திடீரென்று நிறுத்தப்பட்டது.

பாகூர்,

பாகூரை அடுத்த கொம்மந்தான்மேடு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, புதுச்சேரி - கடலூர் பகுதிகளை இணைக்கும் வகையில், கடந்த 2010-ம் ஆண்டு சுமார் 8 கோடி ரூபாய் செலவில் புதுச்சேரி பொதுப்பணித்துறை மூலம் தரைப்பாலத்துடன் கூடிய படுகை அணை கட்டப்பட்டது. இது நிலத்தடி நீரை தேக்கி வைப்பது மட்டுமின்றி இருமாநில மக்களின் போக்குவரத்திற்கும் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இதனிடையே, தென்பெண்ணையாற்றின் தெற்கு கரை பகுதியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டி திறக்கப்பட்டது. இதையடுத்து தரைப்பாலம் வழியாக மதுபிரியர்கள் வருவதை தடுக்க, கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்லாதவாறு, இரும்பு பேரிகார்டுகளை போட்டு தடுப்பு ஏற்படுத்தினர்.

பொது மக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதால், தடுப்புகள் அகற்றப்பட்டு மீண்டும் பாலம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் தரைப்பாலத்துடன் கூடிய படுகை அணை ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளோடு இணைக்கப்படாமல் செம்மண் கொட்டப்பட்டு முழுமையடையாமல் இருந்து வந்ததால், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைபாலத்தில் உடைப்பு ஏற்பட்டது.

இந்த பாலத்தை பலப்படுத்தவும், மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் விதமாகவும், பாதியில் விடுபட்ட பாலத்தை அமைத்து பாதுகாக்கவும் புதுச்சேரி அரசு ரூ 4 கோடியே 50 லட்சம் செலவில் பாலம் சீரமைப்பு பணியை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணி நேற்று திடீரென நிறுத்தப்பட்டது. தமிழக பொதுப்பணித்துறையில் உரிய அனுமதி பெறாமல் பணி தொடங்கப்பட்டதால், நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மீண்டும் பாலம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள் ளது. பருவ மழைக்கு முன்பாக படுகை அணை பணி முழுமை பெறாமல் போனதால், இருமாநில மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தமிழக பொதுப்பணித் துறையிடம், புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு படுகை அணை சீரமைப்பு பணிக்கு அனுமதி கேட்டு வருகின்றனர். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Next Story