விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட தேர்வு போட்டிகள் தர்மபுரியை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்
தமிழக அரசின் விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட தேர்வு போட்டிகள் வருகிற 9-ந்தேதி நடக்கிறது. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.
தர்மபுரி,
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர்(பொறுப்பு) சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக அரசால் நடத்தப்படும் விளையாட்டு விடுதிகளில் 7, 8, 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 வகுப்பில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதன்படி தடகளம், இறகுபந்து ஆகிய விளையாட்டுகளில் மாணவ-மாணவிகளுக்கும், கிரிக்கெட், கால்பந்து, தேக்வாண்டோ, ஆக்கி, கைப்பந்து, ஹேண்ட்பால் ஆகிய விளையாட்டுகளில் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு விடுதிகளில் 7-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1.1.2006 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.
8-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1.1.2005 அல்லது அதற்கு பின்னரும், 9-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1.1.2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். பிளஸ்-1 வகுப்பில் சேர்க்கைக்கு 1.1.2001 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். இந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகள் 2019-2020-ம் கல்வி ஆண்டில் அரசு விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மாணவ-மாணவிகள் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) ஆஜராகி தேர்வு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இதன்படி தடகளம், கால்பந்து விளையாட்டுகளுக்கான மாநில அளவிலான 2-ம் கட்ட தேர்வு போட்டிகள் வருகிற 9-ந்தேதி காலை 8 மணிக்கு சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவகர்லால்நேரு விளையாட்டு அரங்கிலும், இறகுப்பந்து, தேக்வாண்டோ, கைப்பந்து, ஹேண்ட்பால் மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வுப்போட்டிகள் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கிலும் நடைபெறும்.
கிரிக்கெட் விளையாட்டிற்கான தேர்வு போட்டி சென்னை அசோக்நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், ஆக்கி விளையாட்டிற்கான தேர்வு போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கிலும் நடைபெறும். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர 2-ம் கட்ட தேர்வு போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story