பரமத்தி வேலூர் அருகே குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு


பரமத்தி வேலூர் அருகே குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 July 2019 10:30 PM GMT (Updated: 5 July 2019 4:45 PM GMT)

பரமத்தி வேலூர் அருகே நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

பரமத்திவேலூர், 

2019-2020-ம் ஆண்டிற்கான குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ள 14 விதமான பணிகள் மற்றும் மேட்டூர் அணைக்கோட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள 5 பணிகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதையடுத்து பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையத்தில் படுகை அணையில் இருந்து விவசாய சங்கங்களின் மூலம் தொடங்கப்பட உள்ள குடிமராமத்து பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் மோகனூர் பள்ள வாய்க்கால் கடைமடை விவசாயிகள் நல சங்கத்தின் மூலமாக ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால்கள் புனரமைக்கும் பணியும், பரமத்தி வேலூர் ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தின் மூலம் ரூ.45 லட்சத்தில் வடகரையாத்தூரில் ராஜா வாய்க்காலின் வலதுகரையை 200 மீட்டர் நிளத்திற்கு புனரமைக்கும் பணிகளையும், ரூ.49 லட்சத்தில் அய்யம்பாளையம் பகுதியில் தலை மதகின் மேல் மற்றும் கீழ்புறம் புனரமைக்கும் பணிகளையும், ரூ.45 லட்சத்தில் குன்னத்தூர் பகுதியில் ராஜா வாய்க்காலில் வெளிப்போக்கி புனரமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் ரூ.30 லட்சம் செலவில் குன்னத்தனூர் பகுதியில் உபரிநீர் போக்கி புனரமைக்கும் பணிகளையும், ரூ.30 லட்சத்தில் சின்னாகவுண்டம்பாளையம் பகுதியில் வெளிபோக்கி புனரமைக்கும் பணியினையும், ரூ.57 லட்சத்தில் வேலூர் பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலை புனரமைக்கும் பணியினையும், ரூ.30 லட்சத்தில் நன்செய் இடையாறு பகுதியில் உள்ள பொய்யேரி வாய்க்காலை புனரமைக்கும் பணியினையும், செருக்கலை ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் ரூ.28 லட்சத்தில் செருக்கலை ஏரி மற்றும் வழங்கு வாய்க்காலை புனரமைக்கும் பணியினையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் திருச்செங்கோடு வட்டாரத்தில் அகரம் ஏரி, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் ராசிபுரம் வட்டாரத்தில் உள்ள பெரியகோம்பை, புதூர்பாலப்பட்டி, மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அணைக்கட்டு மற்றும் ஏரி புனரமைக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சரபங்கா வடிநில கோட்ட உதவி பொறியாளர் வினோத்குமார், ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அரசு அலு வலர்கள் உடன் சென்றனர்.

Next Story