ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை


ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
x
தினத்தந்தி 6 July 2019 3:45 AM IST (Updated: 5 July 2019 10:19 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 48-வது மகாசபை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் வாங்கிலி தலைமை தாங்கினார். இதில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி.பாரி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில், நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வட்டச்சாலை பணியினை விரைவாக தொடங்கிட வேண்டும். மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும். வாகனங்கள் விபத்தினை சந்திக்கும் போது, ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பெர்மிட் ஆகியவை ரத்துசெய்தல் என்ற முறையை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

நாமக்கல்லில் அரசு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும். லாரி தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தனியாக நலவாரியம் ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க நாமக்கல் பஸ்நிலையத்தை இடமாற்றம் செய்து கொடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கோபால் நாயுடு, பொதுச்செயலாளர் சண்முகப்பா, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகி தனராஜ் உள்பட பல்வேறு லாரி சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக 2019-2022-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் 12 லட்சம் கிளனர்கள் கனரக ஓட்டுனர் உரிமம் பெற இயலாமல் இருந்தனர். தற்போது கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளதால் அவர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெறுவார்கள்.

காப்பீடு, சுங்க கட்டணம் ஆகியவற்றின் மீது அதிகளவு வரி விதிக்கப்படுவதால் லாரி உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக பாதிக்கபடுகின்றனர். எனவே வாகன இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்கவேண்டும். சுங்க கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வசூலிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் லாரிகளை மறித்து பணம் வசூலித்து வருவதை நிறுத்தவேண்டும். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் இதை தடுக்க மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம். வேககட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை பொறுத்தவரை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே 80 கி.மீட்டர் வேகம் வரை செல்லலாம் என அறிவித்துள்ளதால், வேக கட்டுப்பாட்டு கருவி வேண்டாம் என வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story