மாவட்டத்தில் ரூ.5½ கோடியில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் ராமன் தகவல்


மாவட்டத்தில் ரூ.5½ கோடியில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 5 July 2019 10:45 PM GMT (Updated: 5 July 2019 4:53 PM GMT)

சேலம் மாவட்டத்தில் ரூ.5½ கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.

வாழப்பாடி, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் ராமன், புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து ஏத்தாப்பூர் அபிநவம் ஏரி, கொட்டவாடி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீர், நிலைகளை தூர்வாரி மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் குடிமராமத்து திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் ரூ.499 கோடியே 69 லட்சத்தில் 1,820 நீர்நிலைகளில் இந்த வருடம் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ரூ.5 கோடியே 33 லட்சத்தில் சரபங்கா வடிநில கோட்டத்தில் 19 நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது. அதே போன்று மேட்டூர் அணை கோட்டத்தில் ரூ.29 லட்சத்து 70 ஆயிரத்தில் ஒரு பணி என மொத்தம் ரூ.5 கோடியே 63 லட்சத்தில் 20 நீர் நிலைகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது.

ரூ.27 லட்சத்தில், ஏத்தாப்பூர் அபிநவம் அணைக்கட்டு விவசாய சங்கத்தினர் மூலம் கொட்டவாடி ஏரியிலும், ரூ.29 லட்சத்தில் அணைக்கட்டு புனரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளது. அதே போன்று ரூ.28 லட்சத்தில் தார்சாலை புனரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கவுதமன், ஆத்தூர் உதவி கலெக்டர் வேடியப்பன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி ஷியாமளா, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புக்கரசி மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Next Story