தஞ்சை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்
தஞ்சை அருகே மழைக்கு ஒதுங்கியபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள காத்தாடிபட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் ராஜன்(வயது 14). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கண்ணன் இறந்து விட்டார். இதனால் ராஜன் தனது தாய் சித்ரா மற்றும் இரு சகோதரிகளுடன் வசித்து வந்தார்.
மனையேறிபட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ராஜன், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்றான். பள்ளி முடிந்த உடன் மாலை தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
காத்தாடிப்பட்டியில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட ஓட்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடுகள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்து மேற்கூரைகள் இன்றி சுவர்கள் மட்டுமே உள்ளது. இந்த சுவர்கள் மழை நீரில் நனைந்து இருந்தன.
மழை பெய்ததால் ராஜன் அந்த சுவரின் அருகே ஒதுங்கி நின்றான். அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து ராஜன் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராஜன் உயிருக்கு போராடினான்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக காத்தாடிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராஜனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் மருத்துவமனைக்கு சென்று மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
Related Tags :
Next Story