பொதுமக்கள் புகாருக்கு இடமளிக்காமல் பாரபட்சமின்றி தேர்தல் பணி செய்யவேண்டும்


பொதுமக்கள் புகாருக்கு இடமளிக்காமல் பாரபட்சமின்றி தேர்தல் பணி செய்யவேண்டும்
x
தினத்தந்தி 6 July 2019 4:15 AM IST (Updated: 6 July 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகார்களுக்கு இடமளிக்காமல், பாரபட்சமின்றி தேர்தல் பணி செய்யவேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எனவே மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள வாகனங்களை திரும்பப்பெற்று கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும். அதேபோன்று மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு கட்டிடங்களை பொதுப்பணித்துறையினர் திரும்ப பெறவேண்டும்.

பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், விளம்பர பதாகைகள், அரசியல் கட்சியின் சின்னங்கள் ஆகியவற்றை ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாகவும், பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பிலும், நகராட்சி பகுதிகளில் நகராட்சி சார்பிலும், மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பிலும் அகற்றப்பட வேண்டும். இதில் எந்தவித பாரபட்சமும் இருக்கக்கூடாது.

தேர்தல் தொடர்பான பணியில் இருக்கும் எந்தவொரு அரசு அலுவலரையும், தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியின்றி மாறுதல் செய்யக்கூடாது. வாக்காளர்களை கவரும்விதத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்தக்கூடாது. அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டும் எந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்ளக்கூடாது.

பயனாளிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதை தவிர்த்து புதிய நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படக்கூடாது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தங்கும் விடுதிகளில் கலெக்டரின் முன் அனுமதியின்றி யாரையும் தங்க அனுமதிக்கக்கூடாது.

தேர்தல் நடத்தைவிதிகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் புகார்களுக்கு இடமளிக்காமல் பாரபட்சமின்றி தேர்தல் பணிகளை செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவி கலெக்டர் மெகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தாட்சாயினி, ராஜ்குமார் (தேர்தல்) மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
1 More update

Next Story