பனப்பாக்கம் அருகே நிலத்தகராறில் பயங்கரம் தென்னை மட்டையால் அரசு பஸ் டிரைவர் அடித்துக் கொலை
பனப்பாக்கம் அருகே நிலத்தகராறில் சென்னையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் தென்னை மட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய சித்தப்பாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனப்பாக்கம்,
பனப்பாக்கத்தை அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 45). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி பிரபாவதி என்ற மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
பிச்சாண்டியின் சித்தப்பா சின்னக்கண்ணு. விவசாயி. இவருக்கும், பிச்சாண்டிக்கும் இடையே கடந்த 15 வருடங்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. பிச்சாண்டி 4 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு இவர் மது அருந்தினார். போதையில் இருந்த இவர் சின்னக்கண்ணு மற்றும் அவருடைய மகன்களுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை பிச்சாண்டி தனது நிலத்துக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது பிச்சாண்டி அவரது நிலத்தில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிச்சாண்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமாரும் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
பிச்சாண்டி தலை, நெற்றி, கைகள் மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. அருகில் தென்னை மட்டைகளும் கிடந்தன. எனவே பிச்சாண்டி தென்னை மட்டையால் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் நிலத்தகராறு காரணமாக பிச்சாண்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பிச்சாண்டியின் சித்தப்பா சின்னக்கண்ணுவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னக்கண்ணுவின் மகன்கள் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story