வேலூரில் வாலிபர் சரமாரி குத்திக்கொலை
வேலூரில் வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் இம்ரான் (வயது 24). இவர் நேற்று முன்தினம் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள புதிய பாலாறு பாலத்தின் கீழ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென இம்ரானை தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இம்ரான் கத்தியால் குத்தப்பட்டது குறித்து அப்பகுதியில் தகவல் பரவியதும் பொதுமக்கள் அங்கு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இம்ரானை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இம்ரான் நேற்று இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், இம்ரானை கத்தியால் குத்தியது சத்துவாச்சாரி நேருநகரை சேர்ந்த நசீர் (24), இந்திராநகரை சேர்ந்த கண்ணன் (23). ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட இம்ரானுக்கும், நசீர் என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது இம்ரான், நசீரை தாக்கினார். மேலும் நசீரை கொலை செய்து விடுவதாகவும் இம்ரான் மிரட்டினார். இதற்கு பயந்து நசீர் சத்துவாச்சாரிக்கு குடியேறினார். எனினும் நசீர் அச்சத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இம்ரான் நம்மை கொலை செய்து விடுவார் என்று நினைத்து, நசீர் இம்ரானை கொலை செய்துள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் இதுகுறித்து நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story