காவலர் பயிற்சி நிறைவு விழா: மக்களிடம் போலீசார் அதிகாரத்தை காண்பிக்கக்கூடாது
போலீசார், மக்களிடம் அதிகாரத்தை காண்பிக்கக்கூடாது. சமூக விரோதிகளிடம்தான் உங்கள் அதிகாரத்தை காண்பிக்க வேண்டும் என காவலர் பயிற்சி நிறைவு விழாவில் வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் பேசினார்.
வேலூர்,
வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் 2-ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி நடந்தது. மொத்தம் 196 பேர் 7 மாதம் பயிற்சி பெற்றனர். பயிற்சி நிறைவு விழா வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தலைமை தாங்கினார். பயிற்சி பள்ளி முதல்வர் (பொறுப்பு) ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு, அதை ஏற்றுக்கொண்டார். பின்னர் சட்டம், கவாத்து, துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இப்பயிற்சி பள்ளியில் 196 பேரும் சிறப்பாக பயிற்சி முடித்துள்ளர்கள். பயிற்சி அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். 7 மாத பயிற்சியில் நீங்கள் உடல்ரீதியாக வலுபெற்றிருப்பீர்கள். இனி நீங்கள் பணிக்கு செல்லும் போது 1 மாதம் பயிற்சி வழங்கப்படும். இங்கு பலர் கல்லூரி படிப்பை முடித்தவர்களும் உள்ளனர். உங்களது திறமையை பணியின்போது வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய பணி ஒழுக்கம் நிறைந்த பணியாகும். பணியின் போது ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். காலநேரம் இல்லாமல் பணியாற்றக்கூடும். அதை அறிந்து தான் இத்துறையை தேர்வு செய்துள்ளர்கள். அதிக வேலை இருந்தாலும் மன அழுத்தத்துடனே பணியாற்றக் கூடாது. மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்களுக்கு நண்பனாக இருக்க வேண்டும். அதிகாரத்தை மக்களிடம் காண்பிக்க கூடாது. நமக்கென்று மரியாதை உள்ளது. அதிகாரத்தை சமூக விரோதிகளிடம் தான் காண்பிக்க வேண்டும். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். நாம் அனைவரும் பொதுமக்களுக்கான சேவகர்கள். அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். உடற் பயிற்சி செய்வது அவசியம். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Related Tags :
Next Story