வறட்சி காரணமாக திருப்புவனம் பகுதியில் கருகி வரும் வாழைகள்


வறட்சி காரணமாக திருப்புவனம் பகுதியில் கருகி வரும் வாழைகள்
x
தினத்தந்தி 6 July 2019 4:15 AM IST (Updated: 6 July 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் பகுதியில் கடும் வறட்சி காரணமாக வாழைகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

திருப்புவனம்,

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் இந்த பகுதியில் பருவ மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்யலாம் என்ற நிலை இருந்து வருகிறது. மேலும் பருவ மழை பெய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் இந்த பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிதண்ணீருக்காக அவதியடைந்து வரும் நிலை இருந்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி இருந்தவர்கள் விவசாயம் பொய்த்து போனதால் வேலைவாய்ப்பு தேடி ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

சில விவசாயிகள் மட்டும் தங்களது கிணற்று பாசனம் மற்றும் ஆழ்துளை கிணற்றை நம்பி நம்பிக்கையுடன் நெல் பயிர், வாழை, பருத்தி, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்து வருகின்றனர். அவர்கள் தற்போது சிறிதளவு மழை பெய்தால் கூட கிணறுகளில் ஓரளவு தண்ணீர் தேங்கும், அதன்மூலம் பயிர்களை காப்பாற்றி விடலாம் என்று நம்பி இருந்தனர். ஆனால் மழை பெய்யாததால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் மழையில்லாமல் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன. ஆயிரக்கணக்கான ஊருணிகள், தெப்பக்குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. இந்த நிலையில் திருப்புவனம் நான்குவழிச்சாலை கீழடி பகுதியில் கிணற்று பாசனத்தை நம்பி சில விவசாயிகள் தங்களது தோட்டத்தில் வாழை பயிரிட்டனர்.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், வாழைகள், காய்க்கும் நேரத்தில் கருகி வருகிறது. இதைப்பார்த்து விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இது குறித்து அந்தபகுதி விவசாயிகள் கூறும்போது, கிணறு பாசனத்தை நம்பி ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாழை பயிர் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வறட்சி காரணமாக கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், வாழைகள் காய் காய்க்கும் நேரத்தில் கருகி வருகின்றன.

இதனால் ஆயிரக்கணக்கில் செலவு செய்தது வீணாகி போனதால் வேதனை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு தொட்டியும் அமைத்தும், ஏரி, ஆறுகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாக தூர்வாரி மழைக்காலங்களில் தண்ணீரை சேகரித்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்றனர்.

Next Story