கல்வி தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு அரசுத்துறைகளில் பதவி உயர்வு; மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம்


கல்வி தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு அரசுத்துறைகளில் பதவி உயர்வு; மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 July 2019 4:30 AM IST (Updated: 6 July 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு ஊழியர்களுக்கு கல்வி தகுதி, பணி முதுநிலை அடிப்படையில் அரசுத்துறைகளிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையிலும், தமிழரசி, ராமர் முன்னிலையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அய்யம்மாள் பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பாத்திமாமேரி, பொருளாளர் சுப்புகாளை ஆகியோர் வேலை மற்றும் நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்தனர். கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் வாழ்த்தி பேசினர். மாநில பொதுச்செயலாளர் மாயமலை, நூர்ஜகான் ஆகியோர் பேசினர்.

இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

35 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் சத்துணவு பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பு செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 35 ஆண்டுகளாக சத்துணவு ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியுடன் சட்டரீதியான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்.

சத்துணவு பணியாளர்களுக்கு கல்வி தகுதி, பணி முதுநிலை அடிப்படையில் அனைத்து அரசு துறைகளிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் உள்ள காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் பணியாளர்களுக்கு பொறுப்பு படியாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்குவது அவசியம். அலுவலக பணிக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.1000 போக்குவரத்து படியாகயும், ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர் மரணம் அடைந்தால் ஈமசடங்கு செலவாக ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும்.

1 மாத ஊதியம் பொங்கல் போனசாக வழங்க வேண்டும். பணியிடை மரணம் அடையும் சத்துணவு ஊழியரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியாக ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும். சத்துணவு திட்ட பணியிடங்களில் 50 சதவீத ஆண்களை பணி நியமனம் செய்ய வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் எஸ்தர் நன்றி கூறினார்.

Next Story