வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக்கும் திட்டம்: மத்திய அரசின் நடவடிக்கை தொய்வின்றி நடக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை


வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக்கும் திட்டம்: மத்திய அரசின் நடவடிக்கை தொய்வின்றி நடக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை
x
தினத்தந்தி 5 July 2019 11:00 PM GMT (Updated: 5 July 2019 10:27 PM GMT)

மத்திய அரசின் வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக்கும் திட்டத்தில் இடம் பெற்றுள்ள விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் தொய்வின்றி நடக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

கடந்த ஆண்டு மத்திய அரசு தேசிய அளவில் 117 மாவட்டங்களை முன்னேற துடிக்கும் மாவட்டங்களாக கண்டறிந்து 3 ஆண்டுகளில் இந்த மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்த மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்தது. இதைதொடர்ந்து கண்காணிப்பு பணிக்காக மத்திய அரசு அதிகாரியும், மத்திய மந்திரியும் இதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்திற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும், மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரவீன்குமாரும் பொறுப்பு ஏற்று இம்மாவட்டத்தில் நடவடிக்கைகளை தொடங்கினர்.

விருதுநகர் மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளதாகவும், தொடக்க கல்வி மற்றும் சுகாதாரம் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி கூறப்பட்டது.

கடந்த ஆண்டு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இருமுறை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். கடந்த மே மாதம் நடத்திய 2-வது ஆய்வு கூட்டத்தின்போது, விருதுநகர் மாவட்டத்தில் திட்டப்பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்படவில்லை என்றும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

கண்காணிப்பு அதிகாரியும் கள ஆய்வு ஏதும் மேற்கொள்ளாமல் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மட்டுமே நடத்தி சென்றார். இம்மாவட்டம் எந்த காரணத்திற்காக தேர்வு செய்யப்பட்டதோ அதனை விடுத்து தூய்மை இந்தியா திட்டப்பணிகளை மட்டும் மாவட்ட அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு சென்றார்.

அதன் பின்னர் கடந்த ஓராண்டாக இத்திட்டம் குறித்து எவ்வித நடவடிக்கையும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. தொடங்கிய இடத்திலேயே மத்திய அரசின் நடவடிக்கைகள் முடங்கி இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரவீன்குமார் நீண்டநாட்களுக்கு பின்னர் விருதுநகர் வந்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போதும் விருதுநகர் மாவட்டத்தை முன்னேற்ற புதிய திட்டங்களை சிந்தித்து கூறும்படி மாவட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மாவட்ட அதிகாரிகள் தெரிவித்த பின்னர் தான் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என தெரிகிறது. அவரும் பெயரளவில் அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றை பார்வையிட்டு சென்றுள்ளார்.

விருதுநகரின் பல பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று புகார் கூறிய பொதுமக்களுக்கு, மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடுமாறு பதில் அளித்துள்ளார். மாவட்டநிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் அவரிடம் புகார் கூறப்பட்டது. ஆனால் அதற்கும் பலன் இல்லை.

எது எப்படி இருந்தாலும் மத்திய அரசு அறிவித்தப்படி 2021-ம் ஆண்டிற்குள் விருதுநகர் மாவட்டம் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக உருவாக வேண்டும் எனில் மத்திய அரசின் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடும், முனைப்புடனான கண்காணிப்பும் தேவையாகும். அதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே விருதுநகர் தொகுதி எம்.பி.யும் இது பற்றி மத்திய அரசிடம் முறையிட்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story