புதுச்சேரியை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பினை பறிப்பதா? மக்கள் நீதி மய்யம் கண்டனம்
புதுச்சேரியை சேர்ந்த உதவி பேராசிரியர்களின் வேலைவாய்ப்பினை பறிப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசின் கீழ் 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 2 பட்ட மேற்படிப்பு மையங்கள் உள்ளன. இதில் சுமார் 400 உதவி பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், பேராசியர்கள் என பணியில் உள்ளனர். ஆனால் 100-க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் நீண்ட காலமாகவே நிரப்பப்படாமல் உள்ளன.
நீண்ட காலமாக காலியாக இருந்த 146 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு 102 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் மட்டுமே புதுச்சேரியை சேர்ந்தவர்கள். ஏனெனில் நேர்காணலில் வட மாநிலத்தவர்களுக்கே மத்திய தேர்வாணையம் முன்னுரிமை தருகிறது. இந்தநிலையில் புதுச்சேரி கல்லூரிகளில் சேர்ந்த சிலர் மீண்டும் வடமாநிலத்துக்கே சென்றுவிட்டனர்.
அரசு கல்லூரிகளில் வகுப்புகள் அதிகரிக்கப்பட்டதால் உதவி பேராசிரியர்களின் தேவை அதிகரித்தது. இதனால் தற்போதைய அரசு அமைத்த தேர்வுக்குழுவால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 69 கவுரவ விரிவுரையாளர்கள் ரூ.10 ஆயிரம் சம்பளத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் மீண்டும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் தேசிய அளவில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது வன்மையாக கண்டித்தக்கது. ஏனெனில் மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தமிழ் தெரிவது இல்லை. அதுமட்டுமின்றி புதுச்சேரியை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான சம்பளத்தை குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.