மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவிக்கு அரிவாள் வெட்டு, போலீசுக்கு பயந்து தொழிலாளி தற்கொலை - கோவையில் பரிதாபம் + "||" + in Coimbatore, Worker commits suicide in fear of police

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவிக்கு அரிவாள் வெட்டு, போலீசுக்கு பயந்து தொழிலாளி தற்கொலை - கோவையில் பரிதாபம்

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவிக்கு அரிவாள் வெட்டு, போலீசுக்கு பயந்து தொழிலாளி தற்கொலை - கோவையில் பரிதாபம்
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி, போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெ.நா.பாளையம்,

கோவை தடாகத்தை அடுத்த காசி நஞ்சேகவுண்டன்புதூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 34), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கீதா (28). இவர்களது மகன் தர்சன் (9) அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் கீதாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முருகேசன் அவரை கண்டித்தார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கோபித்துக்கொண்ட கீதா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தனது கணவரை பிரிந்து இடிகரையை அடுத்த கோவிந்தநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் பின்னர் அவர் அங்கிருந்தவாறு அருகில் உள்ள அட்டை கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். முருகேசன் தன் மகனுடன் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு கீதாவிடம் முருகேசன் பலமுறை கேட்டும் அவர் வர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன் நேற்று காலை 8 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் அரிவாளை மறைத்து வைத்துக்கொண்டு, அத்திப்பாளையம் குட்டை அருகே காத்திருந்தார். அப்போது வழக்கம்போல் வேலைக்கு வந்த கீதாவை வழிமறித்து அவருடன் தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார். இதில் கீதாவின் இடது கை துண்டானது. அவரது வலது கை மற்றும் தலையிலும் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. இதையடுத்து, கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பொதுமக்களை பார்த்த முருகேசன் உடனடியாக தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த கீதாவை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவியை அரிவாளால் வெட்டிய முருகேசன் போலீஸ் விசாரணைக்கு பயந்து, தடாகம் சாலையிலுள்ள ராமநாதபுரம் பள்ளம் பகுதிக்கு சென்று விஷம் குடித்தார். ஆனாலும் மயக்கம் வராததால், அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.