திண்டிவனம் அருகே, விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை - காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்


திண்டிவனம் அருகே, விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை - காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 July 2019 3:45 AM IST (Updated: 6 July 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மனைவி சுசீலா. இவர்களுடைய மகள் கவுசல்யா(வயது 21), மகன் ஹரிஹரன். இதில் கவுசல்யா பி.ஏ.வும், ஹரிஹரன் 10-ம் வகுப்பும் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கவுசல்யாவும், அதே கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் பிரபு(25) என்பவரும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

அப்போது, கவுசல்யாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபு பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பிரபுவுக்கு எல்லை பாதுகாப்பு படை வீரர் பணி கிடைத்தது. இதையடுத்து பிரபுவுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

இதற்கிடையே பிரபு விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். உடனே கவுசல்யா, பிரபுவிடம் சென்று திருமணம் குறித்து பேசினார். ஆனால் பிரபு, திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு, பெற்றோர் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினார்.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது கவுசல்யாவை பிரபு மற்றும் சிலர் ஆபாசமாக திட்டி, அவரது சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த கவுசல்யா வீட்டுக்கு சென்று அங்கிருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் வெங்கந்தூருக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் உடலை அடக்கம் செய்யாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கவுசல்யாவின் சாவுக்கு காரணமான பிரபு மற்றும் சிலரை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார், இது தொடர்பாக முழுமையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story