‘மணல் கொள்ளையை தடுக்க தீவிரமாக கண்காணியுங்கள்’ போலீசாருக்கு சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவு


‘மணல் கொள்ளையை தடுக்க தீவிரமாக கண்காணியுங்கள்’ போலீசாருக்கு சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவு
x
தினத்தந்தி 7 July 2019 4:00 AM IST (Updated: 6 July 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

மணல் கொள்ளையை தடுக்க தீவிரமாக கண்காணியுங்கள் என்று விழுப்புரத்தில் நடந்த சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் போலீசாருக்கு சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று காலை விழுப்புரத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமால், ராமநாதன், மகேஷ், கனகேஸ்வரி, அஜய்தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-

மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தால் உடனே அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும்.

அதுபோல் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். ஆறுகளில் மணல் கொள்ளை நடக்காமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்புக்கம்பிகள் அமைத்து சீரான வேகத்தில் வாகனங்கள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுபோல் தொடர்ந்து ரவுடி யிசத்தில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தின் வழியாக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு மதுபானங்கள் கடத்தலை தடுக்க மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தி வரும் வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.

Next Story