இலங்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு படையை அனுப்பி தமிழர்களை பாதுகாக்க வேண்டும் பழ.நெடுமாறன் பேட்டி


இலங்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு படையை அனுப்பி தமிழர்களை பாதுகாக்க வேண்டும் பழ.நெடுமாறன் பேட்டி
x
தினத்தந்தி 7 July 2019 4:45 AM IST (Updated: 6 July 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு படையை அனுப்பி தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என தஞ்சையில் பழ.நெடுமாறன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை 10-ம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு நேற்று காலை தொடங்கியது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த மலர் வெளியீட்டு விழாவுக்கு பொன்னிறைவன் தலைமை தாங்கினார். பழனியாண்டி முன்னிலை வகித்தார். மலரை நிஜாமுதீன் வெளியிட பழனிசாமி, சாமி, மணிமொழியன் மற்றும் பலர் பெற்று கொண்டனர்.

அதைத்தொடர்ந்து நடந்த நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். கோ.உதயகுமார், துரை.குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மதிவாணன், புலவர் கலியபெருமாள், தனியரசு எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் மண்ணே, தமிழர் போர்ப்பரணி ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது. மாலையில் பொது அரங்கம் நடந்தது.

முன்னதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை முள்ளிவாய்க்காலில் ஏறத்தாழ 1½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எத்தகைய விசாரணையும் நடத்தப்படவில்லை. இலங்கையில் இன்றும் இனஅழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது. இலங்கையில் நடந்தது போர் குற்றம் அல்ல. திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கையாகும்.

இலங்கையில் 1948-ம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு இனஅழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. உலக அளவில் இனஅழிப்பு நடவடிக்கை தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட்டது. 2-ம் உலக போரின்போது யூதஇனத்தை அழித்ததாக ஹட்லர் மற்றும் நாசிசவாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு குற்றம் தொடர்பாக இதுவரை விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படவில்லை.

போஸ்னியாவில் இன அழிப்பு நடந்தபோது ஐ.நா. பாதுகாப்பு படை அனுப்பி வைக்கப்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டனர். அதேபோல் இலங்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு படையை அனுப்பி தமிழர்களை பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பொது அரங்கம் நடக்கிறது. இதற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

Next Story