குடிமராமத்து பணிகள் தொடர்பாக விவசாயிகளிடம் கலெக்டர் கலந்துரையாடினார்


குடிமராமத்து பணிகள் தொடர்பாக விவசாயிகளிடம் கலெக்டர் கலந்துரையாடினார்
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 7 July 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து பணிகள் தொடர்பாக விவசாயிகளிடம் கலெக்டர் கலந்துரையாடினார்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சிக் குட்பட்ட ஒட்டக்குடி கிராமத்தில் குடிமராமத்து பணிகள் தொடர்பாக விவசாயிகளிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் பாசனதாரர்கள் சங்க பிரதிநிதிகளிடம் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கலந்துரையாடினார். குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்பட உள்ள வாய்க்கால்கள் குறித்து விவசாயிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் ஆனந்த் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலமாக ரூ.16 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் 95 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றை தூர்வாருதல், பழுதடைந்த கட்டுமானங்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

குடிமராமத்து பணிகள்

விவசாயிகள் பாசனதாரர் சங்கம் அமைத்து அதன்மூலம் குடிமராமத்து பணிகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் மாவட்ட பதிவு அலுவலகத்தில் பாசனதாரர் சங்கத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவுடன் பொதுப்பணித்துறை, நீர்வளஆதாரத்துறை அலுவலகத்தை அணுகி தங்கள் பகுதிகளுக்கான பணிகளை பெற்று கொள்ளலாம். அந்தந்த வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட பாசனதாரர்கள் சங்கத்தினால் மட்டுமே இப்பணிகளை மேற்கொள்ள முடியும். வேறு பாசனதாரர் சங்கத்தினால் இப்பணிகளை மேற்கொள்ள முடியாது.

மேலும் பணியின் திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் அரசு நிதியாகவும், 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகவும் இருக்கும். விவசாயிகளின் பங்களிப்பு என்பது நிதியாகவோ, பொருளாகவோ அல்லது பணியாகவோ இருக்கலாம். ஆகவே விவசாயிகள் பாசனதாரர் சங்கங்கள் அமைத்து குடிமராமத்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story