நாமக்கல்லில் குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்; பொதுமக்கள் அதிர்ச்சி
நாமக்கல்லில் குடிநீரில் கலந்து வரும் கழிவுநீரால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல் நகராட்சி 15-வது வார்டிற்கு உட்பட்டது பவுண்டு தெரு. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று முன்தினம் மணியளவில் நகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அந்த குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது.
மேலும் அந்த குடிநீர் கருப்பு நிறத்தில் இருந்ததோடு துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த குடிநீரை கீழே ஊற்றிய பொதுமக்கள் மீண்டும் அதை பிடித்தபோதும், கழிவுநீர் கலந்த குடிநீரே வந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று பவுண்டு தெரு பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- எங்கள் தெருவில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் கலந்து குடிநீர் தான் வினியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் முறையான நடவடிக்கை இல்லை. தற்போது குடிநீரில் கழிவுநீர் கலந்து தான் வந்தது. ¾ மணி நேரம் வினியோகிக்கப்பட்ட குடிநீரில் பெரும்பாலும் கழிவுநீர் கலந்த குடிநீரே வந்தது.
இந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நாங்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
எங்கள் பகுதியில் உப்பு தண்ணீர் வினியோகமும் இல்லை. எனவே நகராட்சி நிர்வாகம் விரைவில் எங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்களை சரி செய்து சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் எங்கள் தெருவிற்கு உப்பு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் நாங்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை விட வேறு வழி இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பேட்டியின் போது பெண் ஒருவர் கழிவுநீர் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்து வைத்திருந்தார்.
Related Tags :
Next Story