மாவட்ட செய்திகள்

பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது + "||" + Dasildar arrested for accepting bribe of Rs

பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,

கரூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம்(வயது 53). இவர் கரூர் தாலுகா அலுவலகத்தில் கேபிள் டி.வி. தாசில்தாராக பணியாற்றி வருகிறார். மேலும் கரூர் நகர நிலவரி திட்ட தனி தாசில்தாராக கூடுதல் பொறுப்பும் வகித்து வருகிறார். இந்தநிலையில் கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சீதாலட்சுமி (35) என்பவர் பட்டா மாற்றம் செய்யக்கோரி நிலவரி திட்ட தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.


பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று பாலசுந்தரம், சீதாலட்சுமியிடம் கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சீதாலட்சுமி அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறினார். இதனால் ரூ.5 ஆயிரம் தருமாறு பாலசுந்தரம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சீதாலட்சுமி, இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து தாசில்தார் பாலசுந்தரத்தை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சீதாலட்சுமியிடம், ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து, தாசில்தார் பாலசுந்தரத்திடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சீதாலட்சுமி நேற்று மதியம் கரூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த பாலசுந்தரத்திடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்தார்.

அதை அவர் பெற்றபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், அருள்ஜோதி, ரேகா ஆகியோர் விரைந்து வந்து பாலசுந்தரத்தை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் நீண்ட நேரமாக விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்து, கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.