பாவூர்சத்திரம் அருகே லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி 2 பேர் காயம்


பாவூர்சத்திரம் அருகே லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி 2 பேர் காயம்
x
தினத்தந்தி 7 July 2019 4:00 AM IST (Updated: 7 July 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

பாவூர்சத்திரம், 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மீனம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரத்தினம் மகன் சரவணன் (வயது 40). லாரி டிரைவர். இவர் நேற்று சிவகாசியில் இருந்து காய்கறிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு, லாரி கிளனரான சிவகாசி விஜயநகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி (27) என்பவருடன் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டை நோக்கி வந்தார்.

வரும் வழியில் மூடை தூக்கும் தொழிலாளியான ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் சுடலையாண்டி (30) என்பவரையும் லாரியில் ஏற்றிக் கொண்டு பாவூர்சத்திரத்திற்கு வந்தனர். பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரம் வந்த போது எதிர்பாராதவிதமாக லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற புளியமரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் காயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுடலையாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். சரவணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story