பஸ்பாடி உரிமையாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் அமைச்சர் அறிவுரை


பஸ்பாடி உரிமையாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் அமைச்சர் அறிவுரை
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 7 July 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

கரூர் பஸ் பாடி உரிமையாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவுரை கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்ட தனியார் பஸ்பாடி உரிமையாளர்கள் சார்பில் தமிழக போக்கு வரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளாருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பாராட்டு விழா கரூரில் நடைபெற்றது. விழாவிற்கு கரூர் பி.டி.கோச் பி.தங்கராசு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. கீதா முன்னிலை வகித்தார். சக்தி கோச் உரிமையாளர் என்ஜினீயர் ஆர்.நடராஜன் வாழ்த்தி பேசுகையில், கரூரில் உள்ள பஸ்பாடி கட்டும் நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளாக அழியும் நிலையில் இருந்தது. இதனை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொறுப்பேற்றபின் அவரது முயற்சியால் இன்று 500 முதல் 700 வரை பஸ் பாடி வரை கட்டப்பட்டு வருகிறது.இந்த நன்றியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம் என்றார். இதில் அட்டல் கோச் பி.பழனிச்சாமி, ராயல் கோச் பில்டர்ஸ் கே.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பஸ்பாடி கூண்டும் தரமானதாக...

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:- இந்தியாவில் உள்ள 95 சதவீத பஸ்பாடி கட்டும் நிறுவனங்கள் கரூரில் உள்ளன. தமிழகத்தில் உள்ள 28 போக்குவரத்து கழகத்திற்கும் சேர்த்து 5 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில் 4 ஆயிரம் பஸ் பாடி கூண்டுகள் கரூரில் கட்டப்பட்டுள்ளன. கரூரில் கட்டும் பஸ்பாடி கூண்டு மிகவும் தரமானதாக இருப்பதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் புதிய பஸ் அறிமுக விழாவில் கூறினர். இந்த பெருமை பஸ் பாடி உரிமையாளர்களுக்கும், அதன் உதிரிபாகம் செய்யும் சிறு தொழில் நிறுவனங்களை சேரும்.

புதிய தொழில் நுட்பம்

உலக அளவில் பூமி வெப்பம் அடைவதை தவிர்க்க பேட்டரி மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பஸ், கார் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பத்தை நம்ஊரில் பயன்படுத்தும் அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தை கற்று பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் தான் தொழில் வெற்றி பெற முடியும். குறுகிய தூர பஸ்களில் குளிர்சாதன வசதி 2 பஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றமையால், தற்போது மேலும் 100 குறுகிய தூர பஸ்களில் குளிர்சாதன வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய பெரும் நகரங்களில் மின்சார பஸ் இயக்கப்படும். ஆம்னி பஸ்களுக்கு நிகராக வாரத்தில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அரசு விரைவு பஸ்களில் 10 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கரூர் பஸ்பாடி கட்டும் உரிமையாளர்கள் ஆம்னி பஸ் கட்டும் தொழில் நுட்பத்தையும் தெரிந்து கொண்டால் அரசு விரைவு பஸ்கள் பாடி கட்ட முன்னுரிமை வழங்கப்படும். பஸ்பாடி உரிமை யாளர்களிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் உங்களுக்கு நல்லது செய்யும் தமிழக அரசுக்கு என்று உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாருதி கோச் பில்டர்ஸ் சவுந்தரராஜன், டி.ஆர்.பாலசுப்பிரமணியன், வி.ரமேஷ்குமார், ஜெமினி கோச் பி.டி.முனியப்பன், டி.வி.ஆர்.கோச் டி.வி.ராமமூர்த்தி, ஸ்ரீ ஹரி பஸ்பாடி பில்டர்ஸ் எம்.பாலாஜி, சி.கண்ணன், சென்னை ஜி.எஸ்.பாடி பில்டர்ஸ் எஸ்.சரவணன், பெஸ்ட் கோச் எஸ்.பழனிசாமி, சென்னை ஏரோ கோச் பில்டர்ஸ் டி.கார்த்திகேயன், கரூர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா, கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா நடைபெற்ற முகப்பு பகுதி அரசு பஸ்போல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story