கிணற்றில் தவறி விழுந்தவர்: சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் விவசாயி சாவு


கிணற்றில் தவறி விழுந்தவர்: சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் விவசாயி சாவு
x
தினத்தந்தி 7 July 2019 4:00 AM IST (Updated: 7 July 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே கிணற்றில் விழுந்த விவசாயிக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் பரிதாபமாக இறந்தார். இதனால் விவசாயியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகப்பு கேட்டை பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே முதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி விநாயகம் (வயது 47), மாற்றுத்திறனாளி. இவர் நேற்று தனக்கு சொந்தமான மாட்டை அருகில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு கட்டுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கிணற்றில் நிலைதடுமாறி தவறி விழுந்தார். பக்கத்து நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் ஓடி சென்று கிணற்றில் விழுந்த விநாயகத்தை மீட்டு சிகிச்சைக்காக முதூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது அங்கு டாக்டர்கள் இல்லை என கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்த நர்ஸ் உடனடியாக விநாயகத்தை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விநாயகம் இறந்த தகவல் முதூர் கிராமம் முழுவதும் பரவியது.

இதனால் ஆத்திரமடைந்த விநாயகத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று நர்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகப்பு கேட்டை இழுத்து பூட்டு போட்டு வாசலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபேல்லூயிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், முதூர் மற்றும் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்த விநாயகத்தை சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது டாக்டர்கள் இல்லை என்று கூறி முதலுதவி சிகிச்சை கூட அளிக்காமல் அரக்கோணத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அவர் பரிதாபமாக இறந்தார். மருத்துவமனையில் பணியில் டாக்டர்கள் இல்லாததால்தான் விநாயகம் இறந்து போனார். ஆகவே பணியில் இல்லாத டாக்டர்கள், நர்ஸ் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர் தாசில்தார் ஜெயக்குமார் கூறுகையில், நீங்கள் கூறிய குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தாசில்தார் மற்றும் போலீசார் மருத்துவமனையின் முகப்பு கேட்டில் பொதுமக்கள் பூட்டியிருந்த பூட்டை திறந்து விட்டனர்.

இந்த சம்பவத்தால் முதூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story